உலக கோப்பை படகுப்போட்டியில் பதக்கம் வென்ற சென்னையச் சேர்ந்த வீராங்கனை

Update: 2020-01-28 07:22 GMT

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற உலக கோப்பை படகுப்போட்டி தொடரில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலக கோப்பை படகுப்போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் நேத்ரா.

இந்த தொடரின் லேஸர் ரேடியல் பிரிவில், அமெரிக்காவின் எரிக்கா ரெய்னெக்கேவுக்கு தங்கமும், கிரீஸ் நாட்டின் வஸில்லீயாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது.

ஸ்பெயின் நாடு கனெரி தீவில் பயிற்சி எடுத்து வரும் நேத்ரா, 2014, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் நான்காவது இடத்தில் நிறைவு செய்த நேத்ரா, பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். தீவிர பயிற்சியில் ஈடுபட்ட இவர், இப்போது உலக கோப்பையில் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

“ஆசிய விளையாட்டின்போது, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. அதனால், என்னால் சோபிக்க முடியவில்லை. இம்முறை தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டு போட்டியில் பங்கேற்றிருந்தேன். பதக்கம் வென்றுவிட்டேன். இதில் வெற்றி பெற்றது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது. அடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதில் கவனம் செலுத்த உள்ளேன்.” என்றார் நேத்ரா.

அடுத்து, மார்ச் 15-ம் தேதி அபுதாபியில் தொடங்க உள்ள ஆசிய படகுப்போட்டி சாம்பியன்ஷிப்பில்,

சிறப்பாக விளையாட வேண்டும். இத்தொடரில், முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிட்டால்,

2020 ஒலிம்பிக்கில் நேத்ரா பங்கேற்பது உறுதியாகும்.