செஸ்: ‘கேன்ஸ் ஓபன்’ பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ்

Update: 2020-02-24 11:57 GMT

பிரான்சு நாட்டில் 34-வது கேன்ஸ் ஓபன் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி சுற்று வரை முன்னேறிய சென்னையைச் சேர்ந்த குகேஷ், போட்டியை வென்றார்

சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கடைசி சுற்றில் 7.5 புள்ளிகளுடன் பிரான்சின் ஹருட்யுன் பர்க்சேகியானை வென்றார்.

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை 2018 ஜூன் மாதம் படைத்தார். இந்த சாதனையை மற்றுமொரு சென்னை சிறுவன் முறியடித்திருந்தார், அவர் தான் குகேஷ். 2019-ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற குகேஷ், இப்போது உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர்.

கடந்த ஆண்டு மட்டும், 243 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள குகேஷ் சர்வதேச செஸ் தரவரிசையில் படிப்படியாக முன்னேறினார். 2019 ஜனவரி 15-ம் தேதி நடைபெற்ற செஸ் போட்டியை வென்று 2512 புள்ளிகளுடன் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். சென்னை வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில் இன்னும் பல சாதனைகளை படைக்க தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்