ஐஎஸ்எல் 2020: அரையிறுதி முதல் லெக்கில் எப் சி கோவா அணியை பந்தாடிய சென்னையின் எப் சி

Update: 2020-03-01 16:51 GMT

அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்த சென்னையின் எப் சி அணி, தனது முதல் லெக் ஆட்டத்தில் எப் சி கோவாவை, சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று எதிர்கொண்டது.

போட்டி தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்னதாகவே ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே வீரர்களுக்காக காத்திருந்தார்கள். உற்சாகமும், கும்மாளமுமாக ஆர்பரித்துக் கொண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு சற்று நேரம் முன் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கரகோஷம் நிறைந்திருந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல் பகுதியின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவிலை. இரண்டாவது பகுதியை சிறப்பாக தொடங்கிய சென்னையின் அணிக்காக முதல் கோலினை 54ஆவது நிமிடத்தில் கேப்டன் கோயன் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சென்னை அணியின் இரண்டாவது கோலினை 62ஆம் நிமிடத்தில் அனிருத் தாபா அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இரண்டு கோல்கள் தந்த உற்சாத்தில் மேலும் ஆக்ரோஷமாக விளையாடினர் சென்னையின் எப் சி வீரர்கள். அதற்கு பலனாக 77ஆவது நிமிடத்தில் எலி சபியாவும், 79ஆவது நிமிடத்தில் ச்சாங்டேவும் கோல் அடித்தனர். இதனால் சென்னை ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. 84ஆவது நிமிடத்தில் கோவா அணி ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் முடிவில் சென்னையின் எப் சி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

அரையிறுதியின் இரண்டாவது ஆட்டம் மார்ச் 7 அன்று கோவாவில் நடக்கவுள்ளது. இந்த ஆட்டத்திலும் வென்று இறுதிப்போட்டிக்கு சென்னையின் எப் சி முன்னேறும் என்று அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.