தடையிலிருக்கும் கோமதி மாரிமுத்து மீண்டும் எப்போது களமிறங்குவார்?

Update: 2021-02-03 03:31 GMT

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்று பிரபலம் அடைந்தவர் கோமதி மாரிமுத்து. இவர் தமிழ்நாட்டின் திருச்சியில் பிறந்தவர். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடினமாக உழைத்து தடகள வீராங்கனையாக உருவெடுத்தார்.

எனினும் கடந்த ஜூன் மாதம் இவருக்கு நிகழ்ந்த ஒரு பெரிய சம்பவம் இவரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் இவரின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதனால் சர்வதேச ஊக்கமருத்து பொருள் தடுப்பு மையம் இவருக்கு 2019 ஆண்டு மே 18 முதல் 2023ஆம் ஆண்டு மே 17 வரை நான்கு ஆண்டு காலம் தடை விதித்தது. இந்தத் தடை தொடர்பாக கோமதி மாரிமுத்து சர்வதேச விளையாட்டு ஆணையத்திடம் முறையிடும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் தற்போது வரை கோமதி மாரிமுத்து இந்தத் தடையை எதிர்த்து முறையிடவில்லை. இந்தத் தடை தொடர்பாக, “நான் நிச்சயமாக எந்தவித தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தையும் உட்கொள்ளவில்லை. நான் சாப்பிட்ட அசைவ உணவில் இந்தப் பொருள் கலந்து இருந்ததா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

என்னுடைய தடையை எதிர்த்து போராட மாநில அரசு எனக்கு உதவவேண்டும். ஆசிய போட்டிக்கு முன்பாகவே தேசிய ஊக்கமருத்து பரிசோதனை மையம் என்னிடம் இந்த விஷயத்தை கூறியிருந்தால் நான் இதனை அப்போதே கண்டறிந்திருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 நாட்களில் 32 வயதை எட்டும் கோமதி மாரிமுத்து அடுத்து 34 வயதில் தான் தடை முடிந்து தடகள போட்டிகளில் பங்கேற்க முடியும். இந்தத் தடைக்கு எதிராக முறையிட்டு வெற்றிப் பெறும் பட்சத்தில் அவர் மீண்டும் தடகள போட்டிகளில் பங்கேற்கலாம். எனினும் அதற்கு வாய்ப்பு குறைவு என்றே காணப்படுகிறது. மேலும் 34 வயதுக்கு மேல் தடகளத்தில் மீண்டும் திரும்பி அவரால் சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘வடசென்னையும் கேரமும்’ – மறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உலக சாம்பியன் மரியா இருதயத்தின் கதை!