மத்திய பட்ஜெட் 2020: விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

Update: 2020-02-01 11:24 GMT

2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் விளையாட்டுத் துறைக்கு மொத்தமாக இந்தப் பட்ஜெட்டில் 2826.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இது கடந்த ஆண்டு மத்திய அரசு செலவு செய்ததாக திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் உள்ள தொகையைவிட வெறும் 50 கோடியே அதிகமாகும். ஏனென்றால் கடந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மத்திய அரசு விளையாட்டுத் துறைக்கு 2776.92 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்தத் தொகையைவிட 50 கோடி ரூபாய் மட்டுமே உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ளது.

முக்கியத்துவம் பெற்ற 'கேலோ இந்தியா' திட்டம் :

விளையாட்டுத் துறையில் அதிகபட்சமாக மத்திய அரசின் கனவு திட்டமான 'கேலோ இந்தியா' விற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு மத்திய அரசு இம்முறை 890.42 கோடி ரூபாய் தொகையை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு செலவு செய்யப்பட்ட நிதியைவிட 312.42 கோடி அதிகமாகும். கடந்த மத்திய அரசு திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி 'கேலோ இந்திய' திட்டத்திற்கு 578.00 கோடி ரூபாய் நிதியை செலவு செய்திருந்தது.

விளையாட்டு வீரர்களின் ஊக்கத் தொகை :

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு இம்முறை குறைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகைக்கு மத்திய அரசு 70 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செய்த செலவைவிட 41 கோடி ரூபாய் குறைவானதாகும். இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு ஊக்க தொகைக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம்:

அதேபோல இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அளிக்கும் தொகையையும் மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தாண்டு இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு செய்த செலவைவிட 115 கோடி ரூபாய் குறைவானதாகும். திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி கடந்த ஆண்டு மத்திய அரசு விளையாட்டு ஆணையத்திற்கு 615 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதுடன், அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அளிப்பது மற்றும் தேசிய விளையாட்டு முகாம்களை அமைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.