ஹாக்கி வரலாற்றில் ஒரு மாயாஜால வீரர் என்றால் அது நம் மேஜர் தயான்சந்த் தான். இவரின் 115ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை மத்திய அரசு ‘தேசிய விளையாட்டு தினம்’ என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி கோரிக்கை ஏழ காரணம் என்ன?
ஹாக்கி உலகில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக இந்தியா உருவெடுத்ததற்கு முக்கியமான காரணம் தயான் சந்த் என்ற வீரர் தான். இவர் தனது அசத்தலான ஆட்டத்தால் கோல் மழை பொழிந்து எதிரணியை திணற வைக்க கூடியவர். இந்திய அணி 1928,1932 மற்றும் 1936 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒலிம்பிக் தங்கம் வெல்ல இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
மேலும் 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை வீழ்த்தியது. அப்போது சர்வதிகாரி ஹிட்லரை தமது பதிலால் அதிர வைத்தார். அத்துடன் ஹிட்லரிடமிருந்து ஹாக்கியின் மாயஜால வீரர் என்ற பட்டத்தையும் தயான்சந்த் பெற்றார்.
Remembering the Wizard of Hockey, Major Dhyan Chand on his birth anniversary, honoured as the #NationalSportsDay. #OneNationCountlessHeroes🇮🇳 pic.twitter.com/ga1YprULJI
— The Bridge (@TheBridge_IN) August 29, 2020
இந்தச் சூழலில் அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு டிஜிட்டல் பக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.. இதில் ஒரு விவாதமும் நடத்தப்பட்டது. அதில் சில முன்னாள் ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தயான்சந்த் குறித்து 85வயதான முன்னாள் ஹாக்கி வீரர் குருபாக்ஸ் சிங், “தயான் சந்த் எங்களுக்கு ஒரு கடவுள் போன்றவர். அவருடன் நாங்கள் சேர்ந்து விளையாடியது எங்களுக்கு பெருமையான ஒன்று. அவரை மாதிரி ஒரு சிறந்த மனிதர் மற்றும் வீரர் கிடைப்பது அரிது. அவர் ஒரு சிறப்பான வீரர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் வீரர் ஹர்பிந்தர் சிங், “தாதா தயான்சந்த் மீது நான் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் 100 மீட்டர் தூரம் ஓட்டத்தில் எங்கள் அணியில் சிறப்பான நேரத்தை வைத்திருந்தேன். அதைப் பார்த்த அவர் நீ உன்னுடைய வேகத்துடன் பந்தை கட்டுபடுத்த பழகினால் சிறப்பாக இருக்கும் என்றார். அதை நான் ஒரு குருவின் ஆலோசனையாக கருதி செயல்பட்டேன் ” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் வீரர் வால்மிகி, “இந்தியாவில் ஹாக்கி என்றால் தயான்சந்த் தான். இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் அதே தான் சொல்லப்படும் அது எப்போதும் எங்களுக்கு பெருமையான ஒன்று. . நான் ஜெர்மனியில் ஹாக்கி லீக் போட்டியில் விளையாடும் போது நான் தயான்சந்த் மண்ணில் இருந்து வந்த வீரர் என்று அனைவரும் என்னை பாராட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தனை சிறப்பு மிக்க வீரருக்கு மத்திய அரசு உடனடியாக பாரத ரத்னா விருதை அறிவித்து கௌரவிக்க வேண்டும் என்பதே வீரர்களின் கருத்தாக உள்ளது. மேலும் பல விளையாட்டு ஆர்வலர்களும் ஹாக்கியின் மாயாஜால வீரருக்கு பாரத ரத்னா விருது தான் சிறப்பான சமர்ப்பணமாக அமையும் என்கின்றனர்.
மேலும் படிக்க: “பத்து ஆண்டுகளாக நான் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டேன்..”- முன்னாள் கோ-கோ கேப்டன்