மகளிர் ஐபிஎல் எப்போது? -விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி

Update: 2020-08-02 13:04 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விளையாட்டு உலகம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் விளையாட்டு வீரர்கள் தங்களின் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் யுஏஇ-யில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத் தொடர் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் மகளிர் ஐபிஎல் என்று கருதப்படும் சேலஞ்சர் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் பலர் மகளிர் கிரிக்கெட் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் ,”மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அத்துடன் மகளிர் கிரிக்கெட் அணிக்காக நாங்கள் ஒரு திட்டத்தையும் வைத்துள்ளோம். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தேசிய கிரிக்கெட் அகாடமி மூடப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சூழல் சரியான பிறகு மகளிர் அணிக்காக ஒரு பயிற்சி முகாம் அமைக்கப்படும் என்பதை நான் உறுதியாக தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல பிசிசிஐயிடம் வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்களின்படி மகளிர் ஐபிஎல் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.