காளி பூஜையில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கேட்ட ஷகிப் அல் ஹசன்

Update: 2020-11-18 02:42 GMT

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன். இவர் அண்மையில் கிழக்கு கொல்கத்தா பகுதியில் நடைபெற்ற காளி பூஜையில் பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் இவர் ஒரு குத்து விளக்கை ஏற்றியுள்ளார்.

இதுதொடர்பான நிழற்படம் சமூகவலை தளங்களில் பரவி வந்தன. இதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் தளத்தில் ஒருநபர் ஷகிப் அல் ஹசன் காளி பூஜையை தொடங்கி வைத்து இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார். அத்துடன் அவர் ஷகிப் அல் ஹசனிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக, “சமூக வலைத்தளம் மற்றும் பத்திரிகை ஆகியவற்றில் நான் கொல்கத்தா சென்று காளி பூஜையை தொடங்கி வைத்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அது முற்றிலும் தவறான ஒன்று. நான் அந்த பூஜையை தொடங்கி வைக்க வில்லை.

அந்தப் பூஜையை கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹகிம் தான் தொடங்கி வைத்தார். எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் கூட என்னுடைய பெயர் இல்லை. ஒரு இஸ்லாமியராக நான் எப்போதும் மத நடவடிக்கைகளை பெரிதும் கடைபிடித்து வருகிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான விஷயங்களை ஐசிசிக்கு தெரிவிக்காததால் ஷகிப் அல் ஹசனிற்கு கிரிக்கெட் விளையாட ஐசிசி ஒராண்டு தடை வித்திருந்தது. அந்த தடை கடந்த அக்டோபர் 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடை சிக்கலில் இருந்த மீண்டு ஷகிப் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் யார்க்கர் நாயகன் நடராஜனின் கனவை நிஜமாக்கிய வருண் சக்ரவர்த்தியின் காயம்!