அறிமுக டி20 போட்டியில் அசத்திய 'சின்னப்பம்பட்டி சிங்கம் நடராஜன்'- ட்விட்டரில் பாராட்டிய ரசிகர்கள்

Update: 2020-12-04 12:22 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டி கான்பராவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் சாஹல் மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். கடந்த 2ஆம் தேதி தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் இன்று சர்வதேச டி20 போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார்.

தனது முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன் அதிரடி வீறர் மேக்ஸ்வெலின் விக்கெட் சரியான நேரத்தில் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு விக்கெட் வீழ்த்தி நடராஜன் அசத்தினார்.

இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 30 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். மேலும் இந்தப் போட்டியில் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 தொடரில் இரண்டு தமிழக வீரர்களும் சிறப்பாக பந்துவீசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கெனவே தனது முதல் ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜனை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் இன்று தனது முதல் டி20 போட்டியிலும் நடராஜன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: ‘கடுமையான சூழலிருந்து வந்து கிரிக்கெட்டில் சாதிக்க நடராஜன் ஒரு முன்னுதாரணம்’ – ஹர்திக் பாண்ட்யா