முத்தரப்புத் தொடர்: ராஜேஸ்வரி, ஹர்மன்பிரீத் அசத்தல்; இந்திய அணி வெற்றி

Update: 2020-01-31 06:42 GMT

இந்தியா மகளீர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்று உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று கேன்பராவில் நடைபெற்றது. இதில் இந்தியா மகளீர் அணியும் இங்கிலாந்து மகளீர் அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளீர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மகளீர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஏமி ஜோன்ஸ் மற்றும் டனி வாட் களமிறங்கினர். முதல் ஓவரை இந்தியாவின் ராஜேஸ்வரி கேய்க்வாட் வீசினார். முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஏமி ஜோன்ஸ் 1 ரன்னிற்கு தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

இதன்பின்னர் வாட் 4 ரன்களுக்கு ராஜேஸ்வரியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் ஸ்கிவர்(20), வில்சன்(7) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

எனினும் கடைசி 10 ஓவர்களில் ஹீதர் நைட் மற்றும் பியூமவுண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் விகித்தை உயர்த்தியது. இதனால் 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. ஹீதர் நைட் அரைசதம் கடந்து 44 ரன்களில் 2 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

5ஆவது விக்கெட்டிற்கு ஹீதர் நைட்-பியூமவுண்ட் ஜோடி 69 ரன்கள் சேர்த்து அசத்தியது. பின்னர் 37 ரன்களுடன் பியூமவுண்ட் தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளீர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ராஜேஸ்வரி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட்களையும், ராதா யாதவ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஷிகா பாண்டே 2 விக்கெட்களை சாய்த்தார்.

148 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய மகளீர் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஸ்மிருதி மந்தானா விக்கெட் கீப்பர் ஜோன்ஸ் இடம் கேட்ச் கொடுத்தார். எனினும் ஜோன்ஸ் கீழே விழும் பந்தை தவறவிட்டதால் ஸ்மிருதி மந்தானா அவுட் ஆகவில்லை. இருந்தப் போதும் ஸ்மிருதி மந்தானா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்கிவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

https://twitter.com/7Cricket/status/1223109098972909568

இதனையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும் ஷாபாலி வர்மாவும் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். முதல் 6 ஓவர்களில் இந்திய மகளீர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் சேர்த்தது.

ஷாபாலி வர்மா 25 பந்துகளில் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதேபோல மறுமுனையில் அதிரடி காட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 11 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 10 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வேதா கிருஷ்ணமூர்த்தி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வெற்றி இலக்கிற்கு அருகில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

இறுதியில் கடைசி ஓவர் இந்திய மகளீர் அணிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிக் சருக்கு விளாசி அணியை வெற்றிப் பெற செய்தார். இதன்மூலம் முத்தரப்புத் தொடரில் இந்திய மகளீர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 50 டி20 போட்டியில் அணியை வழிநடத்தி சென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வெற்றிப் பெற செய்தது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைய வைத்தது. இந்திய மகளீர் அணி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.