ஏடிபி பெங்களூரூ சேலஞ்சர் 2020 : பிரஜ்னேஷ், ராம்குமார் முன்னேற்றம்

Update: 2020-02-12 14:37 GMT

ஏடிபி சேலஞ்ர் போட்டிகளில், ஏசியாவிலேயே அதிக பரிசுத்தொகை வழங்கும் போட்டியான ஏடிபி சேலஞ்ர் பெங்களூரு 2020, கேஎஸ்எல்டிஏ டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நாளான இன்றும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. முதல் ஆட்டத்தில் உலக தரவரிசையில் அதிக இடத்தில் இருக்கும் இந்தியரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஜெர்மனியை சேரந்த செபஸ்டியன் ஃபான்செலோவை எதிர்த்து விளையாடினார். எளிதாக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அவர் இறுதியில் (6-2, 4-6, 6-4) என போராடி வெற்றிபெற்றார்.

அடுத்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன் மற்றும் அபினவ் சண்முகம் ஆகியோர் மோதினார்கள். இந்த ஆட்டத்தில் அனுபவமிக்க ராம்குமார் (6-1, 6-3) என எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சித்தார்த் ராவத், ரிஷி ரெட்டி ஆகியோர் மோதினார்கள். இதில் (6-2, 6-2) என சித்தார்த் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாகேத் மைனேனி அஸ்திரேலியாவின் மேட் ரெய்டுன் இணைந்து இந்திய ஜோடியான பலெகேரே ரவிக்குமார், வஷிஸ்ட் செருக்கு ஆகியோரை எதிர்த்து ஆடி (6-3, 6-1) என்ற கணக்கில் வெற்றிபெற்றார்கள். இன்றைய நாளின் கடைசி ஆட்டத்தில் இந்திய டென்னிஸ் ஜாம்பவானான லியான்டர் பயஸ் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஸ்லோவேனியாவின் ப்லாஷ் ரோலா மற்றும் சைனாவின் ஷாங் ஷிஷென் ஆகியோரை எதிர்த்து விளையாடினார். இதில் லியான்டர், மேத்யூ இணை (7-6, 6-4) என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனர். இந்த தொடரே இந்திய மண்ணில் லியான்டர் விளையாடும் கடைசி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.