வீடு கட்ட தடகள வீரருக்கு தங்களது நிலத்தை கொடுத்து உதவிய கேரள தம்பதி !

Update: 2020-02-05 02:13 GMT

தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த முகமது அனாஸ் யஹியா. 25 வயதான இவர் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் மூன்று வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

அப்போது அனாஸின் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஒரு பைக்கை பரிசாக கொடுக்க முன்வந்துள்ளனர். இதனை அறிந்த அனாஸின் தாயார், "எங்களது வீட்டிற்கு சரியான பாதையே இல்லை பிறகு எதற்கு பைக் எனக் கேட்டுள்ளார்". எனவே அப்பகுதி மக்கள் அவருக்கு பரிசுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளனர். முகமது அனாஸ் அந்தப் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சசிதரன்-வினிதா குமாரி தம்பதி மற்றும் முகமது அனாஸ் (படம்: நியூஸ்மினிட்)

இந்தச் செய்தியை அறிந்த சசிதரன் நாயர் மற்றும் வினிதா குமாரி தம்பதி, அனாஸ் வீடு கட்ட தங்களது நிலத்தை தந்து உதவி செய்துள்ளனர். இதுகுறித்து சசிதரன் 'தி நியூஸ்மினிட்' தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,"அனாஸின் நிலையை அறிந்து நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவருக்கு எங்களது நிலத்தை கொடுத்தோம். ஆனால் அப்போது அவர்களுக்கு வீடு கட்டும் அளவிற்கு வசதி இல்லை.

தற்போது ஒரு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் அவருக்கு வீடு கட்ட உதவு உள்ளனர். எனவே நாங்கள் அவருக்கு தற்போது நிலத்தை கொடுத்துள்ளோம். அவர் எங்களது கிராமத்திற்கு பெரிய அளவில் பெருமை தேடி தந்துள்ளார். ஆகவே அவர் ஒரு நல்ல வீட்டில் தங்குவதற்கு தகுதியானவர். எனவே தான் நாங்கள் எங்களது நிலத்தை அவருக்கு வழங்கினோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அனாஸின் தாயார் ஷீனா, "நாங்கள் தற்போது எங்களது மூதாதையருக்கு சேர்ந்த இடத்தில் வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு செல்ல நல்ல சாலை வசதி கூட இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் புதிய வீடு கட்ட தங்களது நிலத்தை கொடுத்து உதவியுள்ள சசிதரன் தம்பதிக்கு எனது மனமார்ந்த நன்றி. நான் அந்த தம்பதியை நேரில் பார்த்தது கூட இல்லை. ஆனால் எங்களது பிரார்த்தனைகளில் அவரது குடும்பத்தின் பெயர் ஏற்கெனவே இடம்பெற்று விட்டது" எனக் கூறினார்.

முகமது அனாஸிற்கு உதவிய சசிதரன் ஒரு முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரர். சொந்தக் காரர்களே உதவ தயங்கும் இந்தக் காலத்தில் ,விளையாட்டு மீது அதிக பற்று கொண்ட சசிதரன் விளையாட்டில் பெருமை சேர்க்கும் மற்றொரு வீரருக்கு உதவியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் மனிதர்கள் இன்னும் நம்முடன் வசித்து வருகிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நல்ல சான்றாக அமைகிறது.