“காயம் கவலையில்லை, களத்தில் இறங்க தயார்” – தடகள வீரர் தருண் அய்யாசாமி

Update: 2020-01-25 02:33 GMT

2018 ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றது முதல், இந்த தமிழக வீரரின்

பெயர் இந்திய விளையாட்டு உலகில் பரிச்சயமானது. 400 மீட்டர் தடையோட்டத்தில்

மட்டுமின்றி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனது அணியின் வெற்றிக்கு

பங்காற்றினார் அந்த இளைஞன். இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் வீடு திரும்பிய அவரை,

தமிழ் மக்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர். அப்போது கிடைத்த உற்சாகத்தோடு தொடர்ந்து

ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர்தான் திருப்பூரைச் சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாசாமி!

2020 ஒலிம்பிக் சீசன் என்பதால், தகுதிச்சுற்று போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முக்கியமான இந்நேரத்தில், கேரளாவில் பயிற்சி எடுக்க ஒதுங்கியிருக்கும் இந்த வேகப்புயலை தொடர்பு கொண்டு பேசினோம்.

2018-ம் ஆண்டு சிறப்பாக அமைந்த தருண் அய்யாசாமிக்கு 2019-ம் ஆண்டு. ஏற்ற இறக்கங்களுடன் முடிந்தது. கடந்த ஆண்டு சிறப்பாக அமையாததற்கு முக்கிய காரணம், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம். Shin bone stress fracture எனப்படும் தாடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சில தடகள தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்திய அணியின் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முக்கியமான வீரரான அவரால், தொடர்ந்து பங்கேற்க முடியாதது ஏமாற்றத்தை அளித்தது. தருண் அய்யாசாமியின் இந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை அவசியம், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என கருத்துக்கள் வெளிவந்த நிலையில், அவரே இதற்கு பதிலளித்துள்ளார்.

“காயம் கவலையில்லை, களத்தில் இறங்க தயார்”

இது குறித்து பேசிய அவர், “தடகள வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சாதாரணமானது.

எனக்கு திடீரென காயம் ஏற்படவில்லை. 2016-ம் ஆண்டு முதலே கால் பகுதியில் வலியுடன் ஓடி

வருகிறேன். 2018 ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் அப்படியே. இந்த

பிரச்சனையை சாதாரண சிகிச்சையால் சரி செய்ய முடியாது, அறுவை சிகிச்சையால்தான்

குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அறுவை சிகிச்சை செய்தால்,

8-10 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அதனால், முக்கியமான இத்தருணத்தில் அறுவை

சிகிச்சை செய்வதை நான் விரும்பவில்லை. மேலும், இது எனக்கு பழகிப்போன வலி.

கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதில்லை எனவும் மருத்துவர்கள்

தெரிவித்துள்ளனர். எனவே, கால் பகுதியில் ஏற்படும் வலியை குறைக்கும் வகையில்  என்னுடைய தடகள பயிற்சிகளை மாற்றிக்

கொண்டுள்ளேன். இதே உடல் நலத்துடன் என்னால் சிறப்பான ஓட்டத்தை ஓட முடியும் என்ற

நம்பிக்கை உள்ளது. அதனால், பெரிதாக கவலையில்லை” என்றார்.

ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றிருந்த தருண் அய்யாசாமி, இந்த ஆண்டும் தேர்ச்சி பெறுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் தொடங்க இருக்கும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓய்வில் இருக்கும் தருண், இப்போது தகுதிச்சுற்று போட்டிகளுக்கு ஆயுத்தமாகி வருகிறார். மார்ச் மாதம் முதல் தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க இருக்கும் அவர், ஒலிம்பிக் தேர்ச்சி பற்றி பேசும்போது, “தனிநபர், குழு என இரண்டு தடகள விளையாட்டுகளில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறேன். ஆனால், இந்திய தடகள அமைப்பு சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு மட்டும் தயாராகும்படி எனக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் மட்டும் பங்கேற்கும்படி கூறியுள்ளனர். உடல்நலம் சீராக இருக்கும் பட்சத்தில், இரு விளையாட்டுகளிலும் பங்கேற்க எனக்கு அனுமதி வழங்குமாறு தடகள அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளேன். காத்திருப்போம்” என்கிறார்.

400 மீட்டர் தடையோட்டத்தில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான தகுதி நேரம் -

48.90 விநாடிகள். இந்த நேர கட்டுப்பாட்டுக்குள் தருண் ஏற்கனவே ஓடிவிட்டார் என்பது

குறிப்பிடத்தக்கது. 2019 பட்டியாலாவில் நடைபெற்ற தடகள தொடரில், 400 மீட்டர் தடையோட்டத்தை

48.80 விநாடிகளில் கடந்த முதல் இந்தியர் என தேசிய ரெக்கார்டையும் தன்வசம்

வைத்துள்ளார்.

தனிநபர் தடகளத்தில் அசத்தும் தருண், குழு ஓட்டத்திலும் முக்கியமான வீரர். இந்நிலையில், ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்குமாறு இந்திய தடகள அமைப்பு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி களத்தில் இப்போது

எனினும் இந்த குழப்பங்களுக்கான விடைகள், இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். தற்போது கேராளாவில் தடகள பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் அவர், “பட்டியாலாவில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டிருந்தேன். இப்போது கேரளாவில் பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பட்டியாலாவில் வானிலை மாற்றம், உணவு ஆகியவை செட்டாகவில்லை. ஆனால், கேரளா சொந்த ஊருக்கு பக்கம் என்பதாலும், இந்த இடம் பரிச்சயம் என்பதாலும் பயிற்சி மேற்கொள்ள வசதியாக உள்ளது. மார்ச் முதல் களத்தில் விளையாட தயாராகிறேன்.” என்றார்.

பிரபல விளையாட்டுகளையே ஃபாலோ செய்யும் இந்தியாவின் பெரும்பாலான மக்கள்,

தடகளம், மல்யுத்தம், பேட்மிண்டன் என இந்த பக்கம் செவி சாய்ப்பது ஒலிம்பிக் சீசனில்

மட்டும்தான். இதை பற்றி கருத்து தெரிவித்த தருண், சிரித்து கொண்டே, “பிரபல விளையாட்டுகளை

பின்பற்றும் மக்களின் கவனம் இப்போது பதக்கங்களின் பக்கம் திரும்பியுள்ளது

ஆச்சர்யமில்லை. ஏனென்றால் இது ஒலிம்பிக் நேரம். இது வழக்கமாக நடப்பதுதான்.

கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற காரணம், அந்த

விளையாட்டுகளை அனைவரும் விளையாடிப் பார்க்க முடியும் என்பதால் கூட இருக்கலாம்.

ஆனால், தடகளம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளின் நுணுக்கங்களை, விளையாட்டு

முறைகளை பின்பற்ற முடியாததால் இந்த விளையாட்டுகளின்  மக்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கலாம். ஆனால்,

எங்களிடம் இருந்து பதக்கங்களை எதிர்பார்க்க மக்கள் தவறுவதில்லை. தோல்வியுற்றால் ஏமாற்றம்

அடையும் மக்கள், பதக்கத்தோடு திரும்பினால் கொண்டாடவும் தவறியதில்லை” என்கிறார்

உற்சாகமாக!

ஆம், உண்மைதான். பதக்கங்களோடு திரும்பும் சாதனை வீரர், வீராங்கனைகளை கொண்டாட

மக்கள் மறந்ததில்லை. இம்முறை 2020 ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்று பதக்கம்

வென்று வர வாழ்த்துக்கள் தருண்!