ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சீன வீரர்களுக்கு கிடைக்குமா இந்திய விசா?

Update: 2020-02-04 10:08 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சீன வீரர்கள் பங்கேற்க விசா வழங்குமாறு அந்த நாட்டின் மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த சங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு இ-விசா சேவையை நிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு விசா தருவதிலும் அரசு நிறையே கட்டுபாட்டுகளையும் விதித்துள்ளது. சீனாவில் மிகவும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியர்கள் யாரும் சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு விசா வழங்க உதவுமாறு சீன மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "இந்தப் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆகவே அவர்களின் விசா நடைமுறைகளை விரைந்து முடித்து போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விசா வழங்கும்படி செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் இங்கு வந்து பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும்" என சீன மல்யுத்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த சங்கம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க சீனா சார்பில் 40 பேர் கொண்ட அணி வர உள்ளது. இதில் 30 வீரர்களும், 10 வீராங்கனைகளும் வர உள்ளனர். இவர்களில் இருவர் கொரோனா வைரஸ் பாதித்த வுஹான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதிப் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கு முன்பாக இந்தப் போட்டிகள் நடைபெறுவதால், இதில் பங்கேற்க சீனா வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கெனவே பாகிஸ்தானிலிருந்து விண்ணப்பத்திற்கும் 3 வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இந்திய அரசின் சார்பில் விசா வழங்கவில்லை. எனவே இத் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்போது சீன வீரர்களும் பங்கேற்பதில் சிக்கல் உண்டாகியுள்ளது.