ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப் பதக்கம்

Update: 2020-02-20 12:21 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் முதல்நாளில் இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றது. இரண்டாவது நாளான நேற்று மூன்று வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று இந்திய வீராங்கனை திவ்யா காக்கரன் 68 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 68 கிலோ எடைப்பிரிவின் தொடக்கம் முதலே இந்தியாவின் திவ்யா காக்கரன் ஆதிக்கம் செலுத்தினார். இவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் எதிர் வீராங்கனையை பின் ஃபால் முறையில் தோற்கடித்து அசத்தினார்.

 

குறிப்பாக இவர் ஜப்பானை சேர்ந்த ஜூனியர் உலகச் சாம்பியனான நரூஹா மட்ஸ்யூகியை 4-4 என்ற கணக்கில் இருந்தப் போது பின் ஃபால் முறையில் தோற்கடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் அசத்திய திவ்யா தனது முதல் ஆசிய தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் இரண்டாவது பெண் என்ற சாதனையையும் திவ்யா படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று இருந்தார். அவருக்குப் பின் தற்போது திவ்யா காக்கரன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் திவ்யா காக்கரன் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு கிரேக்க ரோமன் பிரிவில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தியாவின் சுனில் குமார் 87 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் கிரேக்க ரோமன் பிரிவில் 27ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் தங்கப் பதக்க கனவை நிறைவேற்றினார்.

மேலும் இன்று நடைபெற இருக்கும் மற்ற போட்டிகளில் இந்தியாவின் நிர்மலா தேவி(50 கிலோ எடைப் பிரிவு), பின்கி(55 கிலோ எடைப் பிரிவு) , சரிதா மோர்(58 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி அடைந்துள்ளனர். இவர்களும் போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை இன்று அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.