ஆசிய குழு பேட்மிண்டன் போட்டி: முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி

Update: 2020-02-11 14:35 GMT

ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் குழுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் பலம் வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டது. மகளிர் பிரிவில் இளம் வீராங்கனைகள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டது. எனினும் மகளிர் அணி இத் தொடரில் பங்கேற்கவில்லை. ஆடவர் அணி மட்டுமே இத்தொடரில் பங்கேற்று உள்ளது.

இந்நிலையில் இந்திய ஆடவர் அணி இன்று தனது முதல் போட்டியில் கஜகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் ஶ்ரீகாந்த் டிமிட்ரி பனாரினை 21-10,21-7 என்ற கணக்கில் 23 நிமிடங்களில் தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து லக்ஷ்யா சென் 21-13,21-8 என்ற கணக்கில் 21 நிமிடங்களில் அர்தூர் நியாசோவை வீழ்த்தினார்.

லக்ஷ்யா சென்

பின்னர் நடைபெற்ற மூன்றாவது ஒற்றையர் போட்டியில் தே 21-11,21-5 என்ற கணக்கில் குல்மாட்டோவை 26 நிமிடங்களில் தோற்கடித்தார். ஆடவர் இரட்டையர் போட்டியில் சாய் பிரணீத்-சிராக் செட்டி இணை நியாசோவ்-பனாரின் ஜோடியிடம் 21-18,16-21,19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

எனினும் இரண்டாவதாக நடைபெற்ற இரட்டையர் போட்டியில் அர்ஜூன்-துரூவ் கபிலா இணை பார்கின்-குல்மாட்டோவ் இணையை 21-14,21-8 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கஜகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை வென்றது.

சாய் பிரணீத்

இந்திய அணி முதலில் இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்று இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மற்றும் ஹாங்காங் வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கவில்லை. எனவே இந்திய அணி தற்போது குரூப் பி பிரிவில் கஜகிஸ்தான், மலேசியா ஆகிய அணிகளுடன் உள்ளது. இந்திய அணி அடுத்து வரும் வியாழக்கிழமை மலேசிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மகளிர் அணி இத் தொடரிலிருந்து விலகியது. இந்திய ஆடவர் அணி 2016ஆம் ஆண்டு ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.