ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து, சாய்னா விலகல்

Update: 2020-01-31 14:22 GMT

ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் மாதம் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் குழுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் பலம் வாய்ந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொடரிலிருந்து அனுபவ வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் விலகியுள்ளனர். எனவே மகளிர் பிரிவில் இளம் அணியே தேர்வுச் செய்யப்பட்டுள்ளது. பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெறுவதில் மும்மரத்தில் உள்ளனர்.

மேலும் இந்தத் தொடரில் பங்கேற்பதால் இவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் ஏற்கெனவே இவர்கள் இருவரும் சுதீர்மன் கோப்பை தொடரில் பங்கேற்றதற்கு புள்ளிகள் கிடைத்து விட்டன. ஆகவே இவர்கள் இருவரும் மற்ற தொடர்களுக்கு தயாராவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆடவர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற சாய் பிரணீத், கிடாம்பி ஶ்ரீகாந்த்,ஹெச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல இரட்டையர் பிரிவிற்கு சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி- சிராக் செட்டி இணையும், துரூவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன் இணையும் இடம்பெற்றுள்ளனர்.

மகளிர் பிரிவில் அஸ்மிதா சலிஹா,அகர்ஷி கஷ்யப்,மாளவிகா பன்சூட்,காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பட்-ஷிகா கவுதம் இணை,ரிட்புரணா பாண்டே-கே.மனிஷா இணை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய குழுப் போட்டியில் ஆடவர் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் இளம் வீராங்கனைகள் களமிறங்குவதால் தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற அஸ்மிதா மீது அதிக எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.

அஸ்மிதா சலிஹா

ஏற்கெனவே சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை சந்தித்த சாய்னா நேவாலுக்கு டோக்கியோ ஒலிம்பிக் மிகவும் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் அவர் ஒலிம்பிக் தகுதிக்காக அதிக கவனம் செலுத்த உள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சாய்னா நேவால் தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற வேண்டும். இல்லையென்றால் சாய்னாவிற்கு ஒலிம்பிக் கனவு தூரமாகி விடும்.