ஆசியக் குழு பேட்மிண்டன்: இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

Update: 2020-02-15 12:59 GMT

ஆசியக் குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய ஆடவர் அணி மட்டும் பங்கேற்றுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் கஜகிஸ்தான் அணியை 4-1 என்ற கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் மலேசிய அணியிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இந்தோனேஷிய அணியை எதிர்கொண்டது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் இந்தோனேஷியாவின் கின்டிங்கை எதிர்த்து விளையாடினார். முதல் கேமை கிண்டிங் 21-6 என்ற கணக்கில் வென்றார். அதன்பிறகு சாய் பிரணீத் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால் முதல் போட்டியை இந்தோனேஷியா அணி வென்றது.

இரண்டாவதாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்‌ஷ்யா சென் இந்தோனேஷிய வீரரான ஜோனத்தன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் 21-18,22-20 என்ற கணக்கில் உலகின் 7ஆம் நிலை வீரரா கிறிஸ்டியை தோற்கடித்தார். லக்‌ஷ்யா செனின் பேட்மிண்டன் வரலாற்றில் தரவரிசையில் டாப் 10 இடத்திலிருக்கும் வீரரை தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி 1-1 என சமன் செய்தது.

லக்‌ஷ்யா சென்

இதன்பின்னர் நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் எம்.அர்ஜூன்-துரூவ் கபிலா இணை இந்தோனேஷியாவின் ஹெண்ட்ரா-அஹசான் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் இந்தோனேஷிய ஜோடிக்கு நெருக்கடியை தந்தனர். எனினும் இந்தோனேஷிய ஜோடி 21-10,14-21,23-21 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அத்துடன் இந்தோனேஷிய அணி 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய வீரர் சுபான்கர் தே இந்தோனேஷியாவின் ரூஸ்டாவிட்டோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுபான்கர் தே தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள ரூஸ்டாவிட்டோவை 21-17,21-15 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்தனர்.

சுபான்கர் தே

ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற இரண்டாவது இரட்டையர் போட்டியில் உலகின் நம்பர் 1 இணையான கிடியான்-சுக்முல்ஜோவை இந்தியாவின் சிராக் செட்டி-லக்‌ஷ்யா சென் இணை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்தோனேஷிய இணை 21-6,21-13 என்ற கணக்கில் போட்டியை 24 நிமிடங்களில் வென்று அசத்தியது. மேலும் 3-2 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி மீண்டும் இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.