ஆசியக் குழு பேட்மிண்டன்: மலேசியாவிடம் இந்தியா அணி தோல்வி

Update: 2020-02-13 12:23 GMT

ஆசியக் குழு பேட்மிண்டன் போட்டிகள் பிலிபைன்ஸில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளிலிருந்து இந்திய மகளிர் அணி விலகியது. எனவே பலம் வாய்ந்த ஆடவர் அணி மட்டுமே இத்தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி கஜகிஸ்தான் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த மலேசிய அணியை எதிர்கொண்டது. முதல் ஒற்றையர் போட்டியில் சாய் பிரணீத் மலேசியாவின் லீ ஜியை எதிர்கொண்டார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் சாய் பிரணீத்தை லீ ஜி 18-21,15-21 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன்-சிராக் செட்டி இணை மலேசியாவின் ஆரோன்-சோ இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 31 நிமிடங்களில் ஆரோன்-சோ இணை 21-18,21-15 என்ற கணக்கில் இந்திய ஜோடியை தோற்கடித்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் ஜூன் வேவை எதிர்த்து விளையாடினார். கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 14-21,21-16,21-19 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தார். இதன்மூலம் இந்திய அணி முன்னிலையை 1-2 எனக் குறைத்தது.

பிரனாய்

எனினும் இதன்பின்பு நடைபெற்ற இரட்டையர் போட்டியில் துரூவ் கபிலா-லக்ஷ்யா சென் இணை ஓங்-டியோ ஜோடியிடம் 14-21,14-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மேலும் கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் பிரனாய் ஹோ லீயாங்கை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய லீயாங் 10-21,15-21 என்ற கணக்கில் 34 நிமிடங்களில் பிரனாயை தோற்கடித்தார். இதன்மூலம் மலேசிய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது.

அத்துடன் இரண்டு வெற்றிகளுடன் மலேசிய அணி பி பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மலேசயா மற்றும் இந்தியா அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளன. இந்திய அணி காலிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.