இந்திய தடகள விளையாட்டில் பி.டி.உஷாவிற்கு பிறகு அதிகம் பிரபலமான பெண்மனி அஞ்சு பாபி ஜார்ஜ் தான். இவர் நீளம் தாண்டுதலில் உலகளவில் ஒரு சிறப்பான வீராங்கனையாக இருந்தார். இவர் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் அஞ்சு பாபி ஜார்ஜிற்கு அவரது சொந்த ஊரான செங்கனாசேரியில் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது செங்கனாசேரி நகராட்சிக்கு உட்பட்ட சாலைக்கு அஞ்சு பாபி ஜார்ஜ் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
— Anju Bobby George (@anjubobbygeorg1) September 5, 2020
இதுதொடர்பாக அந்த நகராட்சியின் தலைவர் சஜின் ஃபிரான்சிஸ், “இவர்களின் சாதனையை முன்கூட்டியே நாங்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். எனினும் தற்போது அதனை அங்கீகரித்தற்கு மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கௌரவம் தொடர்பாக அஞ்சு பாபி ஜார்ஜ் பிடிஐ நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார். அதில், “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனினும் எனது சொந்த ஊர் என்னுடைய சாதனையை பாராட்டி கௌரவம் அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அஞ்சு பாபி ஜார்ஜூடன் சேர்ந்து மற்றொரு சாலைக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கைப்பந்து வீரரான பரதன் நாயரின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. பரதன் நாயர் 1958ஆம் ஆண்டு இந்திய கைப்பந்து அணி ஆசிய கோப்பையில் வெண்கலம் வென்ற போது அணியில் இடம்பெற்று இருந்தார்.
மேலும் படிக்க: காலிறுதிக்கு முன்னேறி போபண்ணா ஜோடி அபாரம்