என்னுடைய வெற்றிக்கு என் அம்மா…”- இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் இந்திய பெண் 

Update: 2020-08-26 03:03 GMT

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம். இந்தச் சிகரத்தை இந்திய பெண் ஒருவர் இரண்டு முறை எட்டி சாதனைப் படைத்துள்ளார். அவருக்கு இந்தாண்டிற்கான டென்சிங் நோர்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. யார் அந்தப் பெண்? இவர் சாதனை என்ன?

ஹரியானா மாநிலம் ஹிசர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா குண்டு. இவர் தற்போது ஹரியானா காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 13வயது இருந்தப் போது தனது தந்தையை இவர் இழந்துள்ளார். அதன்பின்னர் இவரது தாய் பால் வியாபாரம் செய்து அனிதா குண்டுவை வளர்த்துள்ளார்.

இவருக்கு மலை ஏற்றத்தில் மீது ஆர்வம் வந்ததால் இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்காக தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நேபாளத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தை முதல் முறையாக ஏறி சாதனைப் படைத்தார்.

 

அதன்பின்னர் மீண்டும் சீனா பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை எட்ட வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துள்ளது. இதற்காக மீண்டும் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி சீனாவிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் பயணத்தை அனிதா தொடங்கியுள்ளார். பல தடைகளை தாண்டி மே 21ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை எட்டி அங்கு இந்திய தேசிய கொடியை நட்டினார். இதன்மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் பெண் என்ற சாதனையை அனிதா படைத்தார்.

இந்தாண்டிற்கான டென்சிங் நோர்கே விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், “எவரெஸ்ட் சிகரத்தை நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் ஏறிய முதல் இந்திய பெண் நான் தான். என்னுடைய இந்த வெற்றிகளை அனைத்திற்கும் என்னுடைய அம்மா தான் காரணம். 13 வயது முதல் என்னை அவர் சிறப்பாக வளர்த்து வருகிறார். மேலும் இந்த விருதை எனக்கு அளித்த அரசிற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அனிதாவை பாராட்டி ஹரியானா மாநிலத்தின் டிஜிபியும் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனைப் படைத்தனர். அதன்பின்னர் பலர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்டது. இது கிட்டதட்ட 29,029 அடி உயரமாகும்.

மேலும் படிக்க: "பத்து ஆண்டுகளாக நான் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டேன்.."-முன்னாள் கோ-கோ கேப்டன்