டிராவிட்டிற்கு பிறகு ஆஸி. மண்ணில் வெற்றி ரன்னை அடித்த ரஹானே!

Update: 2020-12-29 10:47 GMT

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய காலைப்பொழுது மிகச் சிறப்பாக தொடங்கியது. காரணம், ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதே ஆகும். இந்த வெற்றியில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய அணியினை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது மிகக் கடினமான ஒன்றாகும், அதிலும் அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அதிலும் இந்தியக் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி நிச்சயம் தோல்வி அடையும் என பலர் கூறியிருந்தனர். முக்கிய பந்துவீச்சாளர் மொகமது சமி காயம் அடைந்திருந்ததும், முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்வியும் இதற்கு காரணமாகும்.

ஆனால் இந்த அனைத்து கருத்துக்களையும் தவிடு பொடியாக்கி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி. இது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெறும் எட்டாவது வெற்றியாகும். அணித் தலைவர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் முன்னின்று சிறப்பாக வழிநடத்தினார் ரஹானே.

[embed]https://twitter.com/Partho_das007/status/1343769337534971904?s=20[/embed]

இந்த வெற்றியில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் பெற்ற எட்டு வெற்றிகளில் சேஸிங் முறையில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும் இது. இதற்கு முன்னர் யாராலும் மறக்க முடியாத ராகுல் டிராவிடின் டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படும் அடிலெய்டில் கிடைத்த வெற்றியாகும். அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி ரன்னினை டிராவிட் அடித்திருப்பார். அதற்கு பின்னர் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி ரன்னினை அடித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அஜிங்கியா ரஹானே. மெல்போர்னில் நடந்த இந்த போட்டியூம் வரும் காலங்களில் நிச்சயமாக அஜிங்கியா ரஹானே போட்டி என்று அழைக்கப்படும்.