'வி' திரைப்பட நடிகர் சுதீர் பாபு ஒரு முன்னாள் முதல் நிலை பேட்மிண்டன் விளையாட்டு வீரரும் கூட!

Update: 2020-09-09 14:16 GMT

இந்திய பேட்மிண்டன் உலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் - புலேலா கோபிசந்த். விளையாடும் காலத்தில் இவர் செய்த சாதனைகள் அலப்பரியது. பேட்மிண்டன் போட்டிகளில் உயரிய போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார். விளையாட்டில் இருந்து ஒய்வு பெற்றபின் பயிற்சியாளராக புதிய பாதையை தொடங்கி பல சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறார். சாய்னா நெஹ்வால், பி வி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டாகும். கோபிசந்த் தற்போது இந்திய தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா உலகில் முன்னணி விளையாட்டு வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் கோபிசந்தின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் படமாக எடுக்கவுள்ளனர். இதில் கோபிசந்தாக நடிக்கவிருப்பவர் முன்னால் பேட்மிண்டன் வீரரும் தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீர் பாபு ஆகும்.

இவர் தற்போது அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வி' திரைபடத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்காக சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாக சுதீர் பாபு கூறியிருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் முதல் நிலை பேட்மிண்டன் வீரராக இருந்தவர். மேலும் கோபிசந்துடன் இணைந்து இரட்டையர் ஆட்டங்களில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதனால் கோபிசந்த் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு மிகுவும் ஆர்வமாக உள்ளதாகவும் அதற்காக கடினமான பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோபிசந்த் கூறுகையில், இந்த திரைப்படத்திற்கு சுதீர் சிறப்பான தேர்வு என்றும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தாங்கள் இருவரும் ஒன்றாக நிறைய விளையாடி இருப்பதால் தன்னை பற்றி அவருக்கு நிறைய தெரியும் எனவும் அதை திரையில் சுதீர் சிறப்பாக வெளிப்படுத்துவார் எனவும் கூறியுள்ளார்.