ஆசிரியர் தினம்: இந்திய விளையாட்டை உயர்த்திய தலைசிறந்த 5 பயிற்சியாளர்கள்

Update: 2020-09-05 02:41 GMT

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செம்படம்பர் 5ஆம் தேதி 'ஆசிரியர்கள் தினம்' கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் மாணவர்கள் தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து வாழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் விளையாட்டுத் துறையில் ஒரு வீரர் வீராங்கனைக்கு ஆசிரியர் என்றால் அது அவர்களின் பயிற்சியாளர் தான். இந்த ஆசிரியர் தினத்தனறு இந்திய விளையாட்டை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் 5 தலைசிறைந்த பயிற்சியாளர்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

  1. கோபிசந்த்(பேட்மிண்டன்):

இந்திய விளையாட்டில் வேறு எந்த பயிற்சியாளரும் கோபிசந்த் அளவிற்கு தலைசிறந்த வீரர் வீராங்கனைகளை உருவாக்கியதில்லை. ஏனென்றால் இவரது பேட்மிண்டன் வீரர் வீராங்கனைகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சாய்னா நேவால், பி.வி.சிந்து, சாய் பிரணீத், கிடாம்பி ஶ்ரீகாந்த், பிரனாய், கஷ்யப் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர் வீராங்கனைகளை இவர் தயார் செய்துள்ளார். அத்துடன் ஹைதராபாத்திலுள்ள கோபிசந்த் அகடாமி பேட்மிண்டன் போட்டிக்கு ஒரு தலைமையிடமாகவே மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங்

2. பல்தேவ் சிங் (ஹாக்கி):

ஹாக்கி விளையாட்டில் 1980-கள் வரை இந்திய அணி ஒரு அசைக்க முடியாத அணியாக இருந்தது. இருப்பினும் ஐரோப்பிய அணிகளின் வளர்ச்சியை தொடர்ந்து இந்திய அணியின் ஆதிக்கம் சற்று குறைய தொடங்கியது. எனினும் தற்போது மீண்டும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி டாப் 5 இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணம் சிறப்பான வீரர்களை தேர்ந்தெடுத்து தயார் செய்ததேயாகும்.

இதில் முக்கிய பங்காற்றியவர் பயிற்சியாளர் பல்தேவ் சிங். கிட்டதட்ட 8 இந்திய ஹாக்கி கேப்டன்களை உருவாக்கிய தலைசிறந்த பயிற்சியாளர் பல்தேவ் சிங். இவர் உருவாக்கிய சந்தீப் சிங், ரிது ராணி, ஜஸ்ஜீத் கவுர், சுரிந்தர் கவுர், ராணி ராம்பால் அர்ஜூனா விருதை வென்றுள்ளனர். அத்துடன் இவரின் வீரர் வீராங்கனைகள் பலர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளனர்.

3. மகாவீர் போகாட்(மல்யுத்தம்):

மல்யுத்தம் என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது ஒரே குடும்பம் தான். அது மகாவீர் போகாட்டின் குடும்பம் தான். தனது மகள்களான கீதா,பாபிதா,வினேஷ், ரிது ஆகியோரை தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியுள்ளார். அத்துடன் மேலும் பல வீரர் வீராங்கனைகளுக்கு இவர் பயிற்சியளித்துள்ளார். இவரின் வாழ்க்கையை டங்கல் திரைப்படம் சிறப்பாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும்.

4. ஜி.எஸ்.ரமேஷ்(செஸ்):

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஜி.எஸ்.ரமேஷ் 2008ஆம் ஆண்டு செஸ் பயிற்சியை ஆரம்பித்தார். இவரின் செஸ் அகாடாமி செஸ் வீரர்களுக்கான சிறப்பான பயிற்சி கூடமாக மாறியது. இந்தப் பயிற்சி பட்டறையிலிருந்து பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் போன்ற தலைசிறந்த வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவின் 10ஆவது கிராண்ட் மாஸ்டரான ரமேஷ் தனது ஆட்டத்தை தொடராமல் பயிற்சியாளராக மாறி பலரின் ஆட்டத்தை கவனித்து வருகிறார்.

5. ஜி.இ.ஶ்ரீதரன்(கைப்பந்து):

இந்திய கைப்பந்து அணியின் தேசிய பயிற்சியாளர் ஜி.இ.ஶ்ரீதரன். 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது. அந்த அணியில் இந்தியாவின் தலைசிறந்த வீரர் ஜிம்மி ஜார்ஜ் உடன் ஜி.இ.ஶ்ரீதரன் அந்த அணியில் இடம்பெற்று இருந்தார். இவர் தனது விளையாட்டு காலத்திற்கு பிறகு பயிற்சியாளராக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரின் சிறப்பான பயிற்சியால் இந்திய கைப்பந்து அணி மீண்டும் உயரத்தை நோக்கி பயணித்து வருகிறது.

இந்த ஆசிரியர் தினத்தன்று விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வோம். விளையாட்டில் இந்திய ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற இவர்களே ஒரு பெரிய காரணமாக இருக்க முடியும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டை சேர்ந்த 17வயது சிறுவன் உலக ஆன்லைன் ஓபன் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்!