22 ஆண்டுகளுக்கு முன்பாக இன்று சென்னை டெஸ்ட் தோல்விக்கு கும்ப்ளே கொடுத்த சாதனை பதிலடி- ரீவைண்ட்

Update: 2021-02-07 03:11 GMT

1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 28-31ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு பிறகு மைதானத்திலிருந்த சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களை எழுந்து நின்று பாராட்டினர். அப்போது சென்னை ரசிகர்கள் உலகெங்கும் பிரபலம் அடைந்தனர்.

இந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிப்ரவரி மாதம் 4-7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிறப்பான பதிலடி கொடுத்தது. இந்த டெஸ்ட் போட்டி சாதனைப் பட்டியலில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அதிலும் குறிப்பாக பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

அந்தப் போட்டியின் கடைசி நாளான அன்று இந்திய அணியின் வீரர் அனில் கும்ப்ளே சிறப்பாக பந்துவீசினார். 420 ரன்களை வெற்றி இலக்காக வைத்து ஆடிய பாகிஸ்தான் அணியை தனது சுழற்பந்துவீச்சால் இவர் துவம்சம் செய்தார். தொடக்க வீரர் அஃப்ரிதி முதல் சக்லின் முஷ்தாக் வரை அனைத்து விக்கெட்களையும் கும்ப்ளே வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

இதன்மூலம் ஜிம் லேக்கருக்கு பிறகு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை கும்ப்ளே படைத்தார். மேலும் இந்தச் சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். இந்தச் சாதனை நடந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

22ஆண்டுகளாகியும் இதுவரை வேறு யாரும் இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை. சர்வதேச அளவிலும் யாரும் இதுவரை 10 விக்கெட்களை வீழ்த்தவில்லை. 1956ஆம் ஆண்டு ஜிம் லேக்கரின் சாதனைக்கு பிறகு 65ஆண்டுகள் கழித்து கும்ப்ளே இச்சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘மேரா நாம் ஹை வாஷிங்டன்’- ரிஷப் பண்ட்டின் ஜாலியான கமெண்ட் வீடியோ