ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பை ஏழாவது முறையாக ஆஸ்திரேலியாவில் வருகிற பிப்ரவரி 21 முதல் நடக்கவிருக்கிறது. 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 10 நாடுகள் பங்கேற்கின்றர். கோப்பையை வெல்லும் என கருதப்படும் அணிகளில் ஒன்றான நியூசிலாந்து, எப்போதும் உலகக்கோப்யையில் சிறப்பாக விளையாட கூடிய அணிகளில் ஒன்று. அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் இதுவரை நியூசிலாந்து கோப்பையை வென்றதில்லை. இந்த முறை அந்த குறையை போக்கும் முனைப்புடன் களமிறங்கின்றனர். உலகக்கோப்பைக்கு முன்னதாக சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த தொடரினை 3-1 கைப்பற்றி தாங்கள் நல்ல ஃபார்மில் இருப்பதை மீண்டும் ஒருமுறை மற்ற அணிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளனர். தனி நபரை சார்ந்தில்லாமல் அணியில் உள்ள அனைவரும் பங்களிப்பது தான் நியூசிலாந்தின் மிகப்பெரிய பலம். என்ற போதிலும் உலகக்கோப்பை என்றால் கூடுதல் ப்ரஷர் வந்துவிடும், கோப்பை வென்ற அனுபவம் இல்லாத இவர்கள் முக்கியமான கட்டங்களில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை காண அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
முக்கியமான வீரர்கள்
ஷோஃபி டிவைன்
தற்போதைய உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர். சமிபத்தில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் அரை சதங்கள் அடித்து டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். பெண்கள் டி20ல் அதிக வேக அரைசதம் அடித்த சாதனையும் இவர் வசம் தான் உள்ளது. கேப்டன் பதவி கூடுதல் பொறுப்பு என்றாலும் கடைசி ஆட்டத்தில் சதமடித்து அசத்தி தான் அனைத்திற்கும் தயார் என நிருபித்துள்ளார்.
சூசி பேட்ஸ்
முன்னாள் கேப்டன். நியூசிலாந்து அணிக்காக டி20களில் முதன்முதலில் சதமடித்தவர். தற்போது உலக பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர். பேட்டிங் வரிசையில் முக்கிய இடமான ஒன்டவுன் இடத்தில் ஆடுபவர். உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட நியூசிலாந்து அணிக்கு இவருடைய பங்களிப்பு மிகவும் அவசியம்.
அமேலியா கேர்
19 வயதே ஆன இவர் தனது சிறப்பான பந்து வீச்சுகளினால் அணியின் முக்கிய பந்துவீச்சளாராக உருவெடுத்துள்ளார். ஓரளவு பேட்டிங்கும் செய்வார் என்பது கூடுதல் சிறப்பு.
அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் ஃபேவரைட் அணியான நியூசிலாந்து பட்டம் வென்றால் நிச்சயம் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்