அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைத்த அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் : படங்களுடன் 10 தகவல்கள்

Update: 2020-02-24 11:29 GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் சீரமைத்து கட்டப்பட்டுள்ள மொடிரா கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்து வைத்தார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த மைதானத்தை பற்றிய 10 சிறப்பம்சங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

  1. இந்த மைதானம் 1,10,000 பேர் அமரக் கூடியது. இதற்கு முன்பு 54,000 பேர் அமரும் வகையில் கட்டப்பட்டிருந்தது. அதை இடித்துவிட்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இப்போது கட்டப்பட்டுள்ளது

2. ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள கிரிக்கெட் மைதானமே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்தது. இந்த மைதானத்தில், 95,000 பேர் அமரும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது

3. மொடிரா மைதானம் என பெயர் பெற்றிருந்தாலும், ‘சர்தார் படேல் மைதானம்’ என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.

4. முதன் முதலாக, 1982-ம் ஆண்டு மொடிரா மைதானம் கட்டப்பட்டது. இதற்காக அப்போது இருந்த குஜராத் மாநில அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.

5. இதுவரை, 37 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்று உள்ளன. 12 டெஸ்ட் போட்டிகள், 24 ஒரு நாள் போட்டிகள், ஒரே ஒரு டி-20 போட்டி இங்கு நடைபெற்று உள்ளது.

6. 2012-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அந்த ஒரே டி-20 போட்டி மட்டுமே இங்கு நடந்துள்ளது. இதுவே, இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணி விளையாடிய கடைசி கிரிக்கெட் போட்டியாகும்

7. 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி இந்த மைதானத்தில் வீழ்த்தியது. காலிறுதி போட்டியான இதில், இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது

8. இதே போட்டியில் தான், சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்து சாதனைப் படைத்தார்

9. மொடிரா மைதானத்தில் 1999-ம் ஆண்டு நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்

10. மேலும், சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து சாதனை செய்ததும் இதே மைதானத்தில் தான்.