2020 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி - ஒரு அலசல்

Update: 2020-02-16 14:37 GMT

பெண்களுக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி உலக பெண்கள் தினத்தில் நடைபெறுவது குறிப்படதக்கது. 2009ல் முதன்முதலில் நடந்த இந்த தொடர் இப்பொழுது ஏழாவது முறையாக நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த முறையும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு தான் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் கருதுகின்றனர். மொத்தமாக நடந்த ஆறு தொடர்களில் நான்கு முறை கோப்பை வென்றது இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை காட்டுகிறது. மெக் லென்னிங், எலிஸ் பெர்ரி, அலீஸா ஹீலீ, ஆஸ்லே கார்ட்னர் என அணி முழுவதும் நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது இந்த அணி. ஹீலீ மேத்யூஸ், அனபெல் சதர்லேன்ட் என இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம்.இருப்பினும் அணியும் சமீபகால பெஃர்மான்ஸுகள் சிறிது வருத்தமளிப்பதாகவே இருக்கின்றது. நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் பட்டம் வென்றிருந்தாலும் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் லீக் போட்டிகளில் தோல்வி அடைந்தது சிறிது சறுக்கலாகவே தெரிகிறது.

அணியின் முக்கிய மூன்று வீரர்கள்:

மெக் லேன்னிங்
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன், மிடில் ஆர்டர் ப்ளேயர் என அணியின் முக்கிய பொறுப்புகளை சுமப்பவர். சில ஆட்டங்களாக சரியாக ஆடாத போதிலும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி அணியை முன்னின்று வழிநடத்துவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

எலீஸ் பெர்ரி
உலகின் தலைசிறந்த வீரராக கொண்டாடபடுபவர். இளம் வீரர்களுக்கு ஒரு ரோல் மாடல். பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார். சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார் என அணைவரும் எண்ணுகிறார்கள்.

அனபெல் சதர்லேன்ட்
அலீஸா ஹீலீ, ஆஸ்லே கார்ட்னர் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்த போதிலும் அஸ்திரேலியா அணிக்கு இந்த தொடரில் கருப்பு குதிரையாக கருதப்படுபவர் 18 வயதான அனபெல் சதர்லேன்ட். சில ஆட்டங்களிலேயே ஆல்ரவுண்டராக உருவெடுத்துவரும் இவர் உலகக்கோப்பையில் தன் முத்திரையை பதிப்பார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

சில பலவீனங்கள் இருந்தாலும் உலகக்கோப்பை என்று வந்தால் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் வெகு சிறப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறையும் அதே தொடரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவை பிப்ரவரி 21 சிட்னியில் எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.