மகளிருக்கான கிரிக்கெட் டி-20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கும் போட்டிகள், மார்ச் 8 வரை நடைபெற உள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதுகின்றன.
2018-ம் நடந்த டி-20 உலகக் கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. இந்த ஆண்டு, கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி பற்றிய சிறிய ரீவைண்டு.
மகளிர் டி-20 உலகக் கோப்பையின் 6-வது பதிப்பு இப்போது தொடங்க உள்ளது. இதற்கு முன்பு நடந்த ஐந்து சீசனில், மூன்று முறை அரை இறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றதில்லை. எனினும், டி-20 உலகக் கோப்பைகளில் பேட்டிங் பவுலிங்கில் மெறுகேற்றிக் கொண்டுள்ள இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்வுமன், 3 பவுலர்கள் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்
டாப் 3 பேட்ஸ்வுமன்
மித்தாலி ராஜ்
டி-20 உலகக் கோப்பையில் மட்டு 24 போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி ராஜ், மொத்தம் 726 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி முடிசூடா பேட்ஸ்வுமனான இவர், 2009-2018 சீசன் வரை அனைத்து டி-20 உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ளார். அதிகபட்சமாக 57 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 97.31 வைத்துள்ளார். டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் எடுத்த வீராங்கனை இவர்.
ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய அணியின் கேப்டன், அதிரடி பேட்ஸ்வுமன் என பெயர் பெற்ற ஹர்மன்பிரீத் கவுர், 25 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 428 ரன்கள் எடுத்திருக்கும் இவர், டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் ஸ்கோரர். அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்திருக்கும் இவர், டி-20 உலகக் கோப்பையின் அதிரடி பேட்ஸ்வுமன்களில் ஒருவர். ஸ்ட்ரைக் ரேட் 112.92 என அதிரடி காட்டும் இவர், இந்த சீசனிலும் பேட்டிங்கில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பூனம் ரவுத்
2009-2014 வரை இந்திய அணிக்காக டி-20 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள பூனம் ரவுத், 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்திருக்கும் அவர், மொத்தம் 375 ரன்கள் எடுத்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் டாப்-3 பேட்ஸ்வுமன்கள் இவர்கள்தான் என்றாலும், இந்த சீசனில் ஸ்மிரிதி மந்தானா, ஜெமிமா ராட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா என இளம் படை பேட்டிங் லைன்-அப்பில் இடம் பிடித்துள்ளது.
டாப் 3 பவுலர்கள்
பூனம் யாதவ்
இந்திய அணி பவுலிங் யூனிட்டின் நம்பிக்கை நட்சத்திரம் பூனம் யாதவ். 2014-ம் ஆண்டு முதல் டி-20 உலகக் கோப்பையில் விளையாடி வரும் பூனம், மொத்தம் 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் இவர், இந்த சீசனில் அசத்த காத்திருக்கிறார்
பிரியங்கா ராய்
8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பிரியங்க ராய், 12 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சிறந்த பவுலிங்காக வெறும் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியவர்.
ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய அணியின் கேப்டன் ஆல்-ரவுண்டரான ஹர்மன், டாப் 3 பவுலர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். டி-20 உலகக் கோப்பையில் 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பவுலிங் பர்ஃபாமென்ஸாக, 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இந்த ஆண்டும் களத்தில் இருக்கும் ஹர்மன், சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது