TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

புரோ லீக்: உலக சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைக்குமா?

புரோ லீக்: உலக சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைக்குமா?
X
By

Ashok M

Published: 7 Feb 2020 2:08 PM GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

லலித் குமார் ஹாக்கி

இந்நிலையில் நாளை முதல் ஒடிசாவில் நடைபெறும் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக பெல்ஜியம் அணி வீரர்கள் இந்தியா வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியிலிருந்து ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் பால் புதிதாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளது. ஒலிம்பிக் தொடருக்கு முன்பு நடைபெறும் இந்தப் புரோ லீக் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கும் இந்தப் புரோ லீக் போட்டிகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

புரோ லீக் ஹாக்கி

பெல்ஜியம் அணி 2018ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பை தொடரை வென்றது. மேலும் நடப்பு புரோ லீக் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி தற்போது இந்தியா வந்துள்ளது. அத்துடன் உலக ஹாக்கி தரவரிசையில் முதலிடத்தை தற்போது பெல்ஜியம் பிடித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான போட்டிகள் குறித்து பெல்ஜியத்தின் கேப்டன் தாமஸ் பிரியல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணி தற்போது சிறப்பான ஹாக்கியை விளையாடி வருகிறது. ஆகவே இந்த இரு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக அமையும்.

பெல்ஜியம் அணி

இந்திய வீரர்களின் ஆட்டத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். மேலும் ஒலிம்பிக் தொடருக்கு முன்பு இந்தியா மாதிரியான ஒரு கடினமான அணியுடன் விளையாடுவது எங்களது அணிக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அது ஒலிம்பிக் தொடருக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையும். அத்துடன் நாங்கள் உலகக் கோப்பையை வென்ற இடத்திற்கு மீண்டும் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு எங்களுக்கு நிறையே மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளன" எனக் கூறினார்.

இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை கலிங்கா மைதானத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் 10 முறை மோதியுள்ளன. அவற்றில் 8 முறை பெல்ஜியம் வெற்றியும் 2 முறை ஆட்டம் டிராவிலும் முடிந்துள்ளன. இந்திய அணி இதுவரை ஒடிசாவில் பெல்ஜியம் அணியை தோற்கடித்ததே இல்லை. இந்த வரலாற்றை இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Next Story
Share it