TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட்

உலகக் கோப்பையில் களமிறங்கும் 4 டீன் ஏஜ் இந்திய வீராங்கனைகள் யார் யார்?

உலகக் கோப்பையில் களமிறங்கும் 4 டீன் ஏஜ் இந்திய வீராங்கனைகள் யார் யார்?
X
By

Ashok M

Published: 16 Feb 2020 6:54 AM GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து அணிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இளம் கன்று பயமறியாது என்பார்கள். அந்த வகையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 20 வயதிற்குள் நான்கு வீராங்கனைகள் உள்ளனர். அவர்கள் நான்கு பேரும் ஒருவருக்கு ஒருவர் தங்களுடன் போட்டிப் போடும் திறன் உடையவர்கள். அவர்கள் யார்? அவர்கள் இத்தொடரில் என்ன செய்யப் போகிறார்கள்?

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியிலுள்ள வீராங்கனைகளில் அதிக சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்மிருதி மந்தானா. அவருக்கு தற்போது போட்டியாக உள்ளது ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான். 19வயதேயான ஜெமிமா மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது 17 வயதில் தன்னைவிட இருமடங்கு வயதில் மூத்தவர்கள் உள்ள மகாராஷ்டிர மாநில பெண்கள் அணிக்கு இவர் கேப்டன் ஆனார்.

அதன்பிறகு இவரது வாழ்வில் ஒரே வெளிச்சம் தான். 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தானவிற்கு இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை இவர் தான். அத்துடன் ஒரே ஒவரில் மூன்று சிக்சர் விளாசிய முதல் இந்திய வீராங்கனையும் ஜெமிமா தான். மேலும் தனது முதல் உலகக் கோப்பை டி20 போட்டியில் அரைசதகம் கடந்த முதல் இந்திய வீராங்கனையும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தான். இப்படி அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருக்க தனது குறும்புகள் மூலம் இந்திய வீராங்கனை இவர் திணறடித்து வருகிறார்.

https://twitter.com/IPL/status/1125642518035664897

இந்திய ஆண்கள் அணியில் எப்படி சாஹல் டிவி பிரபலமோ அதே மாதிரி மகளிர் கிரிக்கெட்டில் 'ஜெமிமா பவுன்சர்ஸ்' மிகவும் பிரபலம். அதில் இவர் ஸ்மிருதி மந்தானாவை எடுத்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக ட்ரெண்டானது. தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் ஜெமிமா இம்முறை சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாபாலி வர்மா:

இந்திய மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸை தீதி(அக்கா) என்று அழைக்க இரண்டு வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்றால் அது ஷாபாலி வர்மாவும் ரிச்சா கோஷும் தான். அவர்கள் இருவரும் தற்போது 16வயது நிரம்பியவர்கள். ஷாபாலி வர்மாவை பற்றி நாம் பெரிதாக கூற தேவையில்லை தனது முதல் அரைசதம் மூலம் உலகத்தையே தன் பக்க ஈர்த்தவர் ஷாபாலி வர்மா.

ஷாபாலி வர்மா

அவர் தற்போது தனது ஐகான் வீரரையும் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக நேரில் பார்த்து விட்டார். இவர் முத்தரப்புத் தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்கியதே அனைவரையும் வியக்க வைத்தது. அந்த ஃபார்மை உலகக் கோப்பையிலும் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிச்சா கோஷ்:

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சா கோஷ். இவர் ஷாபாலியை விட 100 நாட்கள் பெரியவர். இவரும் ஷாபாலியும் தான் தற்போது உள்ள இந்திய அணியில் மிகவும் சிறியவர்கள். இவர்கள் இருவரும் 16வயதானவர்கள். இவர் இந்தியாவிற்காக முதல் முறையாக தற்போது நடந்து முடிந்த முத்தரப்புத் தொடரில் அறிமுகமானார்.

ரிச்சா கோஷ் இந்தியா மகளீர் கிரிக்கெட்

நடுகள வரிசை இடத்தில் களம் இறங்கும் ரிச்சா பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் உள்ளிட்ட அனைத்திலும் பரிட்சயம் பெற்றவர். இவர் சமீபத்தில் நடைபெற்ற சேலஞ்சர் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கியமான நடுகள வரிசையில் களமிறங்கி அசத்துவார் என்று நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.

ராதா யாதவ்:

பரோடாவிலிருந்து பந்துகள் வீச பறந்து வந்த இந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் பேட்டிங்கிலும் கெட்டிக்காரர். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீசும் ஆல் ரவுண்டர். இவரும் ஜெமிமா ரோட்ரிக்ஸூம் நெருங்கிய நண்பர்கள். இருவரும் தங்களது 17 வயதில் இந்திய அணியில் முதலில் களமிறங்கினர்.

இதுவரை இந்தியாவிற்காக 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராதா யாதவ் 43 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய ஆயுதமான சுழற்பந்துவீச்சில் இவரும் ஒருவராவர். எனவே சிறப்பாக அசத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Next Story
Share it